ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
1-4-2018 முதல் 7-4-2018 வரை
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
1-4-2018- துலாம்.
3-4-2018- விருச்சிகம்.
6-4-2018- தனுசு.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 1, 2, 3.
செவ்வாய்: மூலம்- 4, பூராடம்- 1, 2.
புதன்: பூரட்டாதி- 4.
குரு: விசாகம்- 4.
சுக்கிரன்: அஸ்வினி- 2, 3, 4, பரணி- 1.
சனி: மூலம்- 3.
ராகு: ஆயில்யம்- 1, பூசம்- 4.
கேது: திருவோணம்- 3, 2.
கிரக மாற்றம்:
புதன் வக்ரம், அஸ்தமனம்.
குரு வக்ரம்.
5-4-2018 புதன் உதயம்.
6-4-2018 புதன் வக்ரநிவர்த்தி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் சனியுடன் சம்பந்தம். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 8-ல் மறைவு என்றாலும், செவ்வாய் வீட்டில் பரிவர்த்தனை என்பதால் மறைவு தோஷம் நிவர்த்தியாகிறது. 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதால் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எதற்கும் குறைவு ஏற்படாது. 9-க்குடைய குரு 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்ப்பதோடு, செவ்வாயும் 12-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்ப்பதால், 4-ஆம் இடத்து ராகுவால் ஏற்படும் சின்னச்சின்ன நோய் உபாதைகளும் தொல்லைகளும் தகுந்த சிகிச்சையால் உடனடித் தீர்வாகும். சிலருக்கு தாயார்வழியில் சில அன்புத்தொல்லைகள் உருவாகி நிவர்த்தியாகும். சிலருக்கு பூமி, வீடு, மனை, வாகன யோகம் அமைய பாக்கியமும், அதற்காகக் கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் சில சீர்த்திருத்தங்கள், அபிவிருத்தி செய்ய நல்ல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தலாம். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் கூட்டுத்தொழில் ஆரம்பிக்கவும் அல்லது சுயமாகத் தனித்தொழில் ஆரம்பிக்கவும் வாய்ப்பு ஏற்படும். உணவு, பெட்ரோல் பங்க், பலசரக்கு, ஸ்டேஷனரி, மெடிக்கல் ஏஜென்சி போன்ற தொழில்கள் லாபகரமாக அமையும். சிலர் கேபிள் டி.வி. அல்லது சி.டி. பிளேயர் வியாபாரமும் செய்யலாம். கேசட் கடை வைத்திருந்த ஒரு அம்மாள் காலப்போக்கில் வி.ஐ.பிக்களின் தொடர்பினால் அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அமைக்கும் சூத்திரதாரியாக வளர்ந்துவிட்டார். யாருக்கு எந்த நேரம் எந்த யோகம் வரும் என்பது தெய்வ ரகசியம்! அதேசமயம் வந்த யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தக்கவைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்! அதற்கும் ஒரு யோகம் வேண்டும்.
பரிகாரம்: 9-ஆம் இடத்துச் செவ்வாய், சனி சேர்க்கையின் கெடுதல் விலகக் கூந்தலுர் முருகன் கோவில் சென்று வழிபடவேண்டும். நாச்சியார் கோவில்- பூந்தோட்டம் பாதையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. செல்: 96886 77538.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த செவ்வாயும் ராஜயோகாதிபதியான சனியுடன் 8-ல் மறைவு. ராசியை குரு பார்க்கிறார். அடிப்படை வாழ்க்கை வசதிகள், தேவைகள் எதற்கும் பஞ்சமில்லை. தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகத்திலும் எந்தக் குறையும் இருக்காது; வராது! 2, 5-க்குடைய புதன் 11-ல் நீசம், வக்ரம், அஸ்தமனம். அவருடன் சூரியன் சம்பந்தம்! 2-ஆம் இடத்தைச் செவ்வாயும் சனியும் பார்ப்பதால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதிக் குறைவு, அர்த்தமில்லாத விவகாரம், சந்தோஷக்குறைவு ஏற்படலாம். 7-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு; சனி சம்பந்தம் என்பதால், கணவன்- மனைவிக்குள் பனிப்போர்- கருத்து வேறுபாடு உருவாகலாம். அல்லது பிரிவு ஏற்படலாம். களஸ்திரகாரகன் சுக்கிரனும் 12-ல் மறைவு என்பதால் சிலருக்கு வருத்தம் அல்லது விலகும்நிலை உருவாகலாம். சிலருக்குத் திருமணமே கேள்விக்குறியாக அமையலாம். அல்லது களஸ்திர தோஷம் ஏற்படலாம். 5-ஆம் இடத்து அதிபதி புதன் நீசம். சிலருக்கு புத்திரதோஷம் ஏற்படலாம். புத்திரதோஷம் என்பது வேறு; புத்திரசோகம் என்பது வேறு. பிள்ளைகளே பிறக்காமல் போவது புத்திரதோஷம். பிள்ளைகள் பிறந்து இறந்துபோவது புத்திரசோகம்! சிலருடைய அனுபவத்தில் கட்டிக்கொடுத்த பெண் பிறந்தகம் வரலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் விவாகரத்துவரை போகும். ஒருசில குடும்பத்தில் "கிளிபோல மனைவி இருந்தும் குரங்குபோல வைப்பாட்டி வைத்துக்கொள்வது' என்ற வாசகப்படி சில ஆண்கள் நடந்து கொள்ளலாம். பொதுவாக ஜெனன ஜாதகத்தில் செவ்வாய், சனி, ராகு- கேது சம்பந்தம் இருந்தாலும், களஸ்திரகாரகனும் களஸ்திர ஸ்தானாதிபதியும் பலம் குன்றியிருந்தாலும் இருமண யோகம் எனப்படும்.
பரிகாரம்: களஸ்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் ஆண்களுக்கு காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமமும்; பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமம், காமோகர்ஷண ஹோமமும் செய்யலாம். மறுமணத்துக்குப் புனர்விவாக மந்திர ஜெபம் செய்யவேண்டும். இதற்கு செலவு செய்யமுடியாதவர்கள் திருமணஞ்சேரி, திருவீழிமிழலை, லால்குடி, தாடிக்கொம்பு, துடையூர், திருவேள்விக்குடி, மாப்படி முதலிய தலங்கள் சென்று வழிபடலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீசம். அவர் ராசிக்கு கேந்திரத்தில் இருப்பதாலும், வீடு கொடுத்த குருவின் பார்வையைப் பெறுவதாலும் நீசபங்கராஜ யோகம் அடைகிறார். அதனால் 1, 4, 10 ஆகிய இடங்களுக்கு நன்மையும் முன்னேற்றமும் உண்டாகும். 1-ஆம் இடம் செல்வாக்கு, சொல்வாக்கைப் பிரதிபலிக்கும் இடம். 4-ஆம் இடம் தாய், தன் சுகம், பூமி, வீடு, வாகனயோகத்தைக் குறிக்கும் இடம். கல்வி வித்தையையும் குறிக்கும். 10-ஆம் இடம் வாழ்க்கை, தொழிலை உணர்த்தும் இடம். இந்த மூன்று இடத்தைப் பொருத்தவகையிலும் உங்களுக்கு நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டாகும். புதனுடன் 3-க்குடைய சூரியன் சம்பந்தப்பட்டு சகோதரகாரகன் செவ்வாயும் பார்ப்பதால், சகோதர வகையில் சகாயமும் நன்மையும் எதிர்பார்க்கலாம். 10-க்குடைய குரு ராசிக்கு 6-ல் மறைந்தாலும் தன் ஸ்தானத்துக்கு 9-ல் திரிகோணம் பெற்று 10-ஆம் இடத்தையே பார்ப்பதால் தொழில், உத்தியோகம், வேலை சிறப்பாக அமையும்; முன்னேற்றமும் உண்டாகும். சிலர் மனைவிக்காக அல்லது தொழில் ஸ்தாபனத்துக்காக கடன் வாங்கும் அவசியம் உண்டாகும். மனைவி வகை உறவினர்களுக்காகவும் கடன் வாங்கவேண்டிய கட்டாயம் உண்டாகும். புதன் தசையோ- புதன் புக்தியோ நடந்தால் மட்டும் சிரமங்கள் உண்டாகலாம். கௌரவப் பிரச்சினை, ஆரோக்கியக்குறைவு, உடன்பிறந்தோர் வகையில் பிரச்சினை, இடத்துப் பிரச்சினை, பூர்வீகச்சொத்துப் பிரச்சினை, வாகன நஷ்டம் போன்ற பலன்களைச் சந்திக்கக்கூடும். அதாவது ஆரம்பத்தில் 1, 4, 10 இடங்களில் எதுஎது நன்மை என்று குறிக்கப்பட்டதோ அவையெல்லாம் புதன் சம்பந்தப்பட்ட தசாபுக்தி நடந்தால் எதிர்மறைப்பலனாக அமையும். அத்துடன் புதன் மாதுர்காரகன் என்பதால் தாய்மாமன் அல்லது பெண் கொடுத்த மாமனார் அல்லது சம்பந்தக்காரர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படலாம்.
பரிகாரம்: திருவெண்காடு புதன் க்ஷேத்திரம். அங்கு சென்று புதனுக்கு 17 நெய் தீபமேற்றி, பச்சை வஸ்திரம் சாற்றி, பச்சைப் பயறு படைத்து 17 முறை வலம் வரவேண்டும். (புதன்கிழமை). மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரரையும் வழிபடலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் இருப்பது ஆகாது. திருடன் மற்றவர்களையும் திருடனாகப் பார்ப்பதுபோலவும், போலீஸ் எல்லாரையும் குற்றவாளியாகப் பார்ப்பதுபோலவும், கருப்புக் கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் கருப்பாகத் தெரிவதுபோலவும் உங்கள் மனோநிலை அமைகிறது. இதுதான் ராகு-கேது சம்பந்தப்பட்ட பலன்.குறிப்பாக 9-க்குடைய குரு 6-க்குடைய ஆதிபத்தியமும் பெற்றவர் என்பதால், தகப்பனாரின் செயல்களும் நடவடிக்கைகளும் உங்கள் பார்வையில் தவறாகவே தோன்றும். அல்லது தாயாருக்கு "அட்வைஸ்' பண்ணுகிற நிலையாகும். ஒருசிலர் மனைவி, குழந்தைகள்மேல் பாசம் இருந்தாலும், அவர்களின் நடவடிக்கைகள் உங்களுக்கு ஆத்திரமூட்டும். அழவைத்து ஆறுதல் அடையலாம். என்றாலும் குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் "அடிக்கிற கைதான் அணைக்கும்' என்பதுபோல, அடுத்து சமாதானமாகி மற்றவர்களையும் சமாதானப்படுத்தலாம். கடகம் என்றால் நண்டு. அதற்கு சுற்றிலும் கால்கள் இருப்பதால், தன் உடலைத் திருப்பாமலேயே நாற்புறமும் பயணிக்கும் ஆற்றல் உண்டு. வாகனங்கள் "ரிவர்ஸ் கியரில்' பின்னோக்கிப் போவதுபோல. 6-ல் உள்ள செவ்வாய், சனி- கடன் நிவர்த்தி, சத்ருஜெயம், நோய் நிவாரணம் ஆகியவற்றைக் குறிக்கும். அதேசமயம் செவ்வாய் 5, 10-க்குடையவர்; சனி 7, 8-க்குடையவர். பிள்ளைகளுக்காகவும் மனைவிக்காகவும் தொழில் சம்பந்தமான புது முயற்சிகளைச் செய்வீர்கள். அது சம்பந்தமான சிலர் கடன்படவும் நேரலாம்.
பரிகாரம்: ராகு- கேது தோஷம் விலக காளஹஸ்தி போகலாம். தென்காளஹஸ்தி எனப்படும் உத்தமபாளையம் போகலாம். ஸ்ரீபெரும்புதூர், திருப்பாம்புரம், கீழ்ப்பெரும்பள்ளம் போன்ற தலங்கள் போய் வழிபடலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசி அதிபதி சூரியன் 8-ல் மறைவு. அவருடன் 2, 11-க்குடைய புதனும் மறைவு- நீசம்- அஸ்தமனம். சிலருக்கு குடும்பச் சிக்கல், உறவினர்கள் பிரச்சினை, சிலருக்குப் பொருளாதாரச் சிக்கல், பற்றாக்குறை வருமானம், மாணவ- மாணவியருக்கு கல்வியில் ஆர்வக் குறைச்சல், மறதி, மந்தப் போக்கு, சிலருக்கு தகப்பனார்- மகன் உறவில் விரிசல், தாய்மாமன் அல்லது பெண் கொடுத்த வகையில் வருத்தம்- இப்படி பல பலன்களைச் சந்திக்கும் நிலை. என்றாலும் சூரியன், புதனுக்கு வீடு கொடுத்த குரு 4-ல் அமர்ந்து அவர்களைப் (சூரியன்- புதனை) பார்ப்பதால், சூரியனைக் கண்ட பனிபோல எல்லாப் பிரச்சினைகளும் சங்கடங்களும் விலகிட அமைப்பு உண்டு. 7-க்குடையவர் சனி 5-ல் செவ்வாய் சம்பந்தம் என்பதால் திருமணத்தடை, தாமதம் ஏற்படலாம். திருமணமானவர்களுக்கு வாரிசுத் தடை, தாமதம் ஏற்படலாம். கணவர் அல்லது மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். ஜாதக தசாபுத்தி பாதகமாக இருந்தால் ஒருசில குடும்பத்தில் கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் ஏற்படலாம். கணவருக்குத் தெரியாமல் மனைவி சீட்டுப் பிடிப்பது, மகளிர் குழுவில் சேர்ந்து செயல்படுதல், கொடுக்கல்- வாங்கல் செய்தல் போன்ற வகையில் எதிர்பாராத ஏமாற்றமும் இழப்பும் ஏற்பட இடமுண்டு. ஒருசில ஆண்கள் வீட்டுக்குத் தெரியாமல் வெளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில் சக்திக்குமீறிய கடன்வாங்கி அநாவசிய செலவுகள் செய்வது, தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விரயம் செய்வது போன்றவற்றால் அசிங்கப்படும் நிலை ஏற்படலாம்.
பரிகாரம்: துணி வெளுக்க மார்க்கம் உண்டு. மனம் வெளுக்க என்ன உண்டு? இறைவழிபாடுதான். புறச்சுத்தத்தோடு அகச்சுத்தம் அவசியம். அதற்கு வழி ஆண்டவனிடம் சரணாகதி அடைவதுதான்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசம், அஸ்தமனம், வக்ரம். அத்துடன் 12-க்குடைய சூரியனோடு சம்பந்தம். 3, 8-க்குடைய செவ்வாயின் பார்வை. இவையெல்லாம் உங்களை மாற்று வழியில் பயணிக்கச் செய்து திணற வைக்கும். 1, 10-க்குடையவர் பலக்குறைவு. 12-க்குடையவர் சேர்க்கை. 8-க்குடையவர் பார்வை. 6-க்குடையவருடன் 8-க்குடையவர் சம்பந்தம். ஒருவருக்கு கெட்ட நேரம் வருகிறது என்றால் நல்லவர்கள் எல்லாம் அவரைவிட்டு விலகிவிடுவார்கள்; ஒதுங்கிவிடுவார்கள். துரியோதனின் அடாவடிச் செயல்களைக் கண்டித்த விதுரரை அவன் அலட்சியப்படுத்தினான். அவர் அவனைவிட்டு விலகி ஒதுங்கிப் போய்விட்டார். அதேபோல நல்ல நேரம் வருகிறது என்றால் நல்லவர்கள் தொடர்பும் நட்பும் ஏற்படும். ஆக 3-ல் மறைவாக இருக்கும் குரு 7-ஆம் இடத்தையும், 7-ல் உள்ள சூரியனையும் புதனையும் பார்ப்பதால், உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கரைசேர்க்க குருவருளும் திருவருளும் துணைபுரியும். 9-ஆம் இடத்தையும் குரு பார்ப்பதால் அதுதான் உங்களின் பூர்வ புண்ணியப் பலன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மனைவிக்கும் இறைவனுக்கும் தொடர்பு இருக்கிறது. பாண்டவர்களுக்கு பாஞ்சாலி வாய்த்தாள்- கண்ணன் கருணையினால். இராமருக்கு நல்ல மனைவியாக சீதை வாய்த்ததும் இராமனால் நிறைவடைய முடியவில்லை. கன்னி ராசிக்கு 7-ல் புதன் நீசம். 5-ல் கேது (ராகு பார்வை). ஜாதக தசாபுத்திகள் பாதகமாக அமைந்து விட்டால் நல்ல மனைவி, மக்கள், நல்ல குடும்பம் அமைந்தும் அதனால் நிறைவடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும். "வாராதுபோல் வந்த மாமணியைத் தோற்போமோ' என்று பாரதியார் பாடிய மாதிரி வைரத்தை கல்லென்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.
பரிகாரம்: பெரம்பலூரிலிருந்து (17 கிலோமீட்டர் தூரம்) செட்டிக்குளம் சென்று குபேரனை வழிபடலாம். 12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்குரிய குபேரரை வழிபடவும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து தன் ராசியைப் பார்ப்பது சிறப்பு. வாரத் தொடக்கத்தில் சுக் ரன் கேது சாரம் (அஸ்வினி) பெற்றாலும், வாரக் கடைசியில் சுய சாரம் பெறுவார். (பரணி). எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னம், ராசி இரண்டுக்கும் அதன் அதிபதிகள் சம்பந்தம் இருந்தாலும் சரி; 5, 9-க்குடைய திரிகோணாதிபதி சம்பந்தம் இருந்தாலும் சரி; சுப ஆதிக்கம் பெற்ற குரு பார்வை இருந்தாலும் சரி- அந்த ஜாதகம் வீண்போகாது. எவ்வளவு பாதகமான தசாபுத்திகள் நடந்தாலும், கோட்சார சனி இருந்தாலும் அந்த ஜாதகர் மீண்டு எழலாம். அப்பர் சுவாமிகளைக் கல்லில் கட்டி சமணர்கள் கடலில் வீசினாலும், நமச்சிவாய எனும் நாமத்தால் கரை சேர்ந்த மாதிரி. 9-ஆம் இடத்துக்கு குரு பார்வை இல்லை. ஆனால் செவ்வாய், சனி பார்வை மட்டும் (மிதுனத்துக்கு) கிடைக்கிறது. 9-க்குடைய புதனும் பாதகாதிபதி சூரியனோடு சேர்ந்து நீசம் என்பதால், கிரக வேதனைகள் வலுவாகத்தான் இருக்கும். அதாவது பக்தனுக்குத்தான் சோதனை வரும். பக்தி இல்லாதவனுக்கு சோதனை தேவையில்லை. ஆனால் பக்தன் சோதனையில் ஜெயித்துவிடுவான். பக்தி இல்லாதவன் வேதனையில் மூழ்கி அழிந்து விடுவான். (தோற்று விடுவான்). குரு துரோணர் வில்வித்தையைக் கற்றுத்தர மறுத்தாலும், குருபக்தியாக ஏகலைவன் வித்தை கற்று அர்ஜுனனுக்கு மிஞ்சிய வில்லாளியாகிவிட்டான். துரோணர் பாரபட்சமாக ஏகலைவனின் கட்டை விரலை குரு காணிக்கையாகப் பெற்றார். அது குருவின் குற்றம்தான். அதற்கு தண்டனையாக குருக்ஷேத்திரப் போரில் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகக் கருதி துரோணர் வில்லைத் தூக்கி எறிந்துவிட்டார். ஆக தெய்வமே (குருவே) தவறு செய்தாலும் தண்டனை (தர்மத்தின் தண்டனை) உண்டு.
பரிகாரம்: குரு சாபம் நீங்க சித்தர்களின் ஜீவசமாதி சென்று வழிபட வேண்டும். உங்கள் மனதை ஆகர்ஷிக்கும் எல்லையைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 2-ல் சனியோடு சம்பந்தம். இவர்களுக்கு வீடு கொடுத்த குரு செவ்வாய் வீட்டில் பரிவர்த்தனை. பொதுவாக ஜென்ம ராசியில் அல்லது ஜென்ம லக்னத்தில் குரு இருந்தாலும் ராசி அல்லது லக்னத்தை குரு பார்த்தாலும், ராசியாதிபதி அல்லது லக்னாதிபதி குரு சம்பந்தம் இருந்தாலும்- குற்றமே செய்திருந்தாலும் குற்றம் தெளிவாகவில்லை என்று விடுதலை பெறுவதற்குச் சமம்.உதாரணமாக சின்னம்மா சிறையில் இருந்தாலும் சகல சௌக்கியங்களோடு வசதியோடு வாழ்வதற்குச் சமம். சிறைக்கைதிக்கான ஆடை இல்லாமல் சுடிதார் அணிந்து மார்க்கெட் போய் வரலாம். அதனால் உங்களுக்கு ஏழரைச்சனி இருந்தாலும் (இன்னும் இரண்டு வருடம் ஏழரைச் சனி பாக்கியிருக்கிறது) செவ்வாய் பரிவர்த்தனை பலத்தால் மேற்கூறிய வசதிகளை அனுபவிக்கலாம். அதாவது தங்கக்கூண்டில் அடைப்பட்ட பஞ்சவர்ணக் கிளிக்கு பாலும் பழமும் உபசரிப்பும் இருக்கும். 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும், கேது சனி வீட்டிலும், ராகுவுக்கு சனியோடு சம்பந்தப்பட்ட செவ்வாய் பார்வையும் கிடைப்பதால், கிரக பலம் குறைவாக இருந்தாலும் தெய்வ பலத்தால் காலம் ஓடும். நாட்களை நகர்த்தலாம். 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு. ஒருசிலரின் அனுபவத்தில் மனைவி அல்லது பிள்ளைகளே தனக்கு எதிர்மறையாகச் செயல்பட்டு வேதனைப்படுத்தலாம். வீதி வழியே போன ஓணானை விரும்பி எடுத்து மடியில் கட்டிக்கொண்டு குத்துதே குடையுதே என்று புலம்ப வைக்கும். 2-ல் உள்ள செவ்வாயும் சனியும் உங்கள் நாக்கில் நின்று வாக்குச் சனி கோப்பைக் குலைக்கும் என்பதற்குச் சமமாக அர்த்தத்தை அனர்த்தமாக்கும். அதனால் விபரீத விளைவுகளை உருவாக்கும். குடும்பத்திலும் குழப்பம் உருவாகும். ரத்த சொந்தபந்தம், சுற்றம் எல்லாம் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்க்கலாம்.
பரிகாரம்: தென்காளஹஸ்தி எனப்படும் உத்தமபாளையம் சென்று காளஹஸ்தீஸ்வரை வழிபடலாம். அப்படியே சின்னமனூர் வழியில் குச்சனூர் சென்று சனீஸ்வரை வழிபடலாம். அங்கேயே அருகில் குருவுக்கு தனிக்கோவில் உள்ளது. அதையும் வழிபடலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் செவ்வாய் வீட்டில் பரிவர்த்தனை. செவ்வாய் குரு வீட்டில் பரிவர்த்தனை. ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகத்துக்கும்- தர்மகர்மாதிபதி யோகத்துக்கும்- கேந்திர திரிகோணாதிபதி சம்பந்த யோகத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இவை இருந்தால் கோட்சாரம் அல்லது தசாபுக்திகள் ஏடாகூடமாக இருந்தாலும் கழுவின மீனில் நழுவின மீனைப்போல விதிவிலக்கால் விமோசனம் உண்டாகும். என் குருநாதர் பள்ளத்தூரில் ஆசிரமம் வைத்து நடத்தினார். ஆசிரமத்துக்கு மின் கட்டண வரிச் சலுகை உண்டு. (கோவில் அடிப்படையில்). ஒரு மின் உதவி அதிகாரி குருநாதரிடம் ஜாதகம் பார்க்க வந்தார். அய்யாவுக்கு உடல்நலக் குறைவால் ஒரு மணி நேரம் பூஜையை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கப் போய்விட்டார். ஜாதகம் பார்க்க வந்தவர் பொறுமை இழந்து போய்விட்டார். போனவர் சும்மா இருக்கவில்லை. ஆசிரமமும் வீடும் ஒன்றாக உள்ளதென்றும், மின் கட்டணச் சலுகையை ரத்து செய்து கூடுதல் வரிவிதித்து அபராதத்துடன் கட்டுமாறும் நோட்டீஸ் அனுப்பிவிட்டார். நோட்டீசை வாங்கிய குருநாதர் சம்பந்தப்பட்டவரை சமாதானப்படுத்த நேரில் போனார். தன்னைக் காக்க வைத்ததற்குப் பழிவாங்கும் கருத்தோடு குருநாதரை காத்திருக்க வைத்தார். அந்த நேரம் பார்த்து மேலதிகாரி அங்குவந்ததும் குருநாதரைப் பார்த்து, ""சுவாமி எங்கே இவ்வளவு தூரம்?'' என்று விசாரித்து, நடந்ததைக் கேள்விப்பட்டு சம்பந்தப்பட்டவரை அழைத்து, "அவர்கள் தாரம் என்ன உன் தரம் என்ன? கோவிலுக்குப் போனால் திரைபோட்டிருக்கிறது என்று கோவிலுக்கும் சாமிக்கும் நோட்டீஸ் அனுப்புவீர்களா?' என்று புகாரை கிழித்தெறிந்துவிட்டு, ஆசிரமத்துக்கு எப்போதும் சலுகைக் கட்டணம் என்று பெர்மனண்ட் ஆர்டர் போட்டுவிட்டார். 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் சேர்ந்த (தர்மகர்மாதிபதி யோகம் )பலன் இதுதான்.
பரிகாரம்: சென்னை- கல்கத்தா சாலையில் பஞ்சேஷ்டி என்ற தலம் உள்ளது. அங்கு சென்று வழிபட வேண்டும். தொடர்புக்கு: கணேச குருக்கள், செல்: 98413 44867.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல், குரு வீட்டில் இருக்கிறார். 12-க்குடைய குருவும் 11-க்குடைய செவ்வாயும் பரிவர்த்தனை. எனவே விரயச்சனி நடந்தாலும் சுபவிரயச்சனி என்று எடுத்துக்கொள்ளலாம். 7-ல் ராகு இருப்பது களஸ்திர தோஷம் அல்லது களஸ்திர தடை, தாமதம் என்பதைக் குறிக்கும். என்றாலும் 7-க்கு 5-ல் உள்ள குரு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பரிகார ஹோமம் செய்து திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமம் செய்யவும். பெண்களுக்கு பார்வதி சுயம்வர கலா ஹோமம் செய்யவும். இருவருக்கும் பொதுவாக காமோகர்ஷண ஹோமம் செய்யலாம். திருமணத்தடை விலகவும் நல்ல மணவாழ்க்கை அமையவும் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவிலில் மேற்படி ஹோமங்களைச் செய்யலாம். அம்பாள் மகிஷாசுரமர்த்தனி அவதாரமாக வடக்குப் பார்த்த அம்மன். மூலஸ்தானம். ஏழூர் நாட்டார் பல ஆண்டுகளுக்கு முன்பு வேட்டைக்குப் போனார்களாம். ஒரு பொன்னிற முயலைப் பார்த்து விரட்டிப்போனார்களாம். அது ஒரு பால மரப்பொந்தில் ஓடி மறைந்தது. விரட்டி வந்தவர்கள் பொந்திற்குள் ஈட்டியைக் கொண்டு குத்தினார்கள். டங் டங் என்று வெங்கல ஓசை கேட்டது. கையை விட்டுப் பார்த்தபோது ஒரு அம்மன் சிலை. அதுவே உற்சவமூர்த்தியாக ஊரில் கோவில் கட்டி வழிபடுகிறார்கள். தொடர்புக்கு: அர்ச்சகர் வைத்தியநாத குருக்கள், செல்: 5985 03555. வேலங்குடி வயல்நாச்சியம்மன் சக்தியானவள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தருகிறவள். தங்கக்கவசம் சாத்துபடி ரூ.1501/, வெள்ளிக் கவசம் சாத்துபடி ரூ.1001/. உங்கள் கோரிக்கைகளை அம்மனிடம் முறையிடலாம். ஹோமம் செய்ய சுந்தரம் குருக்களை, செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். 12-ல் செவ்வாய், சனி சம்பந்தம் என்பதால் சிலர் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமாக முதலீடு செய்யலாம். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். அதற்கு வங்கிக்கடன் கிடைக்கும்.
பரிகாரம்: வயல்நாச்சியம்மனை வழிபடவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெறுகிறார். அதாவது சனி பகவானுக்கு 3, 6, 11 ஆகிய இடங்கள் பலம் பொருந்திய இடமாகும். அவருடன் 3, 10-க்குடைய செவ்வாய் சம்பந்தம். செவ்வாய் சனிக்கு உச்ச ராசிநாதன். மகரத்தில் செவ்வாய் உச்சம். அதுமட்டுமல்ல; 11-க்குடைய குரு 10-ல் செவ்வாய் வீட்டிலும், செவ்வாய் குரு வீட்டிலும் பரிவர்த்தனை யோகம் அடைவார்கள். எனவே கொள்கை வேறுபாடு கொண்ட கட்சிகள் தேர்தல் நேரத்தில் தற்காலிகக் கூட்டணி வைத்துக்கொண்டால் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்படுவதுபோல செவ்வாய்- குரு- சனி சம்பந்தம் உங்களுக்கு அனுகூலமாகவும் சாதகமாகவும் அமையும். 6-ல் ராகு, 12-ல் கேது. பாவ ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இருப்பதால் பாவத்தன்மை மாறி சுபப்பலன்களாக நடக்கும். அதாவது விரயமும் விலகும். கடனும் நிவர்த்தியாகும். சத்துரு ஜெயமுமாகும். நோயும் நிவாரணம் ஆகும். அதாவது 6-ஆம் பாவம், 12-ஆம் பாவக் கெடுதல் நீங்கும். 2, 11-க்குடைய குரு 10-ல் பரிவர்த்தனை என்பதால் தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் விருத்தியடையும். வேலையில் பிரச்சினைகள் இல்லாமல் திருப்தியுண்டாகும். உத்தியோக உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி, பணிச்சுமை குறைதல் போன்ற நன்மைகள் எல்லாம் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும். சிலர் கடல் கடந்த வேலைக்குப் போகலாம். நல்ல சம்பளம் வாங்கலாம். 4-க்குடைய சுக்கிரன் 2-ல் உச்சம் பெற்று வீடு கொடுத்த குருவின் பார்வையையும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாயின் பார்வையையும் பெறுவதால் சிலருக்கு பூமி, மனை, வீடு பாக்கிய யோகம் உண்டாகும். சிலர் பழைய வீட்டை லாப விரயத்துக்கு விற்றுவிட்டு வேறு வீடு, புதிய வீடு வாங்கும் அமைப்பு உண்டாகும். இது 12-ல் உள்ள கேது, 12-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகுவின் பலன் எனலாம். 2-க்குடைய குரு 6-ஆம் இடத்தை 9-ஆம் பார்வை பார்க்க 11-ஆம் இடத்துச் செவ்வாயும் ராகுவை 8-ஆம் பார்வை பார்ப்பதால் இடம், வீடு சம்பந்தமாக பற்றாக்குறையை சமாளிக்க தனியார் கடனும் வங்கிக் கடனும் வாங்கலாம்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் (குத்தலாம் வழி) கதிராமங்கலம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் வனதுர்க்கையம்மனை வழிபடலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதோடு, 3-ஆம் இடத்தையும் 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். குரு 1, 10-க்குடையவர். எனவே தொழில், செயல்பாடு, திறமை, கௌரவம் எல்லாவற்றிலும் உங்களுக்கு குறையாத செல்வாக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். அதேபோல எந்த ஒரு காரியத்தையும் துணிவோடும் விவேகத்தோடும் செயல்படுத்தி வெற்றி காணலாம். இதுவரை உடன்பிறந்தோர் வகையிலும் அல்லது நண்பர்கள் வகையிலும் உங்களுக்கு ஒத்துழைப்புக் குறைவாக இருந்திருக்கலாம். இப்போது குரு பார்வையால் அந்தக் குறை தீர்ந்து எல்லாம் நிறைவாக நிறைவேறும். எதனை யாரைக் கொண்டு எப்போது எப்படிச் செய்தால் வெற்றியுண்டாகும் என்ற நுட்பம் தெரிந்து செயல்படுத்துவதில் நீங்கள் வல்லவர்தான். ஆனால் 5-ஆம் இடத்து ராகுவும் 11-ஆம் இடத்து கேதுவும் உங்கள் கணக்கில் சிறு மாற்றம் ஏற்படுத்திவிடும். யாரை நம்ப வேண்டுமோ அவர்களை நம்பாமல் யாரை நம்பக் கூடாதோ அவர்களை நம்பி சில செயல்களைச் செய்வதால், சிலசமயம் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்மறையான பலன்களையும் சந்திக்கச் செய்துவிடும். இருந்தாலும் குரு பகவான் ராசிநாதன் ராசியையும் ராகுவையும் பார்ப்பதால் முடிவில் நஷ்டம் ஈடுசெய்யப்படும். கரையான் புற்று எடுக்க கருநாகம் குடிபுகுந்தாற்போல சிலசமயம் நீங்கள் கை முதலீடு செய்து ஒரு தொழிலை ஆரம்பித்து இன்னொருவரை பங்காகச் சேர்த்து செயல்படலாம். அதன்பிறகு அந்த பங்குதாரர் நீங்கள் கொடுத்த பணத்தை உங்களிடம் திருப்பிக்கொடுத்து அந்த தொழிலை தன் பொறுப்பில் ஏற்று தானே நடத்தத் தொடங்கிவிடுவார். இதெல்லாம் உங்கள் பலவீனம். 10-ல் உள்ள செவ்வாய், சனி படுத்தும்பாடு. அதுமட்டுமல்ல- நீங்கள் ரொம்ப நல்லவராக இருப்பதும் ஒரு காரணம்! ஒரு திரைப்படத்தில் வடிவேல் ஒரு வசனம் பேசுவார். "ரொம்ப நல்லவண்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்' என்பார். அதுபோல நீங்கள் நல்லவராக இருப்பதும் ஒருவகையில் கோளாறுதான்.
பரிகாரம்: நாகை- திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தேவூரில் தேவகுருநாத சுவாமி ஆலயம் உள்ளது. குரு ஸ்தலம். அங்கு சென்று வழிபடவும்.